
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடருக்கான இடம், தேதி ஆகியவற்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வுத் திட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில் அவர் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பது பற்றி யோசிக்கவில்லை என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.