
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) வரவிருக்கும் சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் தங்கள் பெயர்களை ஏலத்திற்காக பதிவுசெய்வார். இதில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரண்டு சீசன்களாக ஏலத்தில் பங்கேற்ற சமயத்திலும், அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவுசெய்வாரா இல்லையா என்பது கேள்வியாகவே இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 2025 தொடரில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், மெகா ஏலத்தில் தனது பெயரை நிச்சயம் பதிவுசெய்வேன் என்றும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'நான் மீண்டும் ஒருமுறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்புகிறேன். என் பெயரை ஏலத்தில் பதிவுசெய்வேன்” என்று கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் விளையாடுவதற்காக ஸ்மித் தொடர்ந்து ஏலத்தில் தனது பெயரை பதிவுசெய்துவரும் நிலையில், கடந்த இரண்டு சீசன்களில் எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. அடிப்படை விலையான ரூ.2 கோடியில் கூட அவரால் எந்த அணியிலும் இடம் பிடிக்க முடியாத சூழல் உருவானது. மேலும் ஸ்டீவ் ஸ்மித் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு வருகிறது.