தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார் - எம்.எஸ்.கே.பிரஷாத்
இளம் வீரர் தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார், ஆனால் அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என தேர்வு குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே பிரஷாத் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
இந்த அணியில் ஆவேஸ் கான் இடம்பெற்றிருந்தார், ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சதமடித்த தேவ்தத் படிக்கல் இடம் பெறவில்லை. இதனால் படிக்கல் ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இருபது வயதே ஆன படிக்கல் அற்புதமாக விளையாடி வருகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 450 ரன்கள் குவித்து சென்ற ஆண்டுக்கான சிறந்த எமர்ஜிங் பிளையேர் விருதை அவர் தட்டிச் சென்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த முடிந்த விஜய் ஹசாரே தொடரிலும் சிறப்பாக விளையாடி 727 ரன்கள் குவித்து அசத்தினார். அதன்பின் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் சொதப்பி இருந்தாலும், பின்னர் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நிச்சயமாக இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்திய அணிக்காக தற்போது அவர் உடனடியாக வந்து விளையாடி விட முடியாது. நிச்சயமாக டெஸ்ட் அணிக்கும் அவர் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு தேவைப்படுகிறது. எனவே வருங்காலத்தில் அவர் இந்திய அணியில் நிச்சயம் களமிறங்குவார் அதில் எந்தவித சந்தேகமும் மாற்றுக்கருத்தும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now