
ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சில காரணங்களால் கடந்தண்டு இறுதியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்ட்ன் பதவியில் இருந்து விலகினார்.
மேற்கொண்டு சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் கிளென் மேக்ஸ்வெல் காயமடைந்து போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இதனால் நடப்பு சீசன் பிபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த கேள்விகள் அதிகரித்தன. இந்நிலியில் நடப்பு சீசன் பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மெல்பொர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த சீசனில் மேக்ஸ்வெல் கேப்டன் பதிவியில் இருந்து விலகிய தருணத்தில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் இந்தாண்டு தொடக்கத்தில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் ஒப்பந்தத்தை 2026-27ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாகவும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் நிர்வாகம் அறிவித்த நிலையில் தற்சமயம் அவரை கேப்டனாகவும் நியமித்துள்ளது.