
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 11ஆம் தேதி முடிவடைந்தது.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களைக் கடந்த நிலையில், இங்கிலாந்து அணி ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 800 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன், தோல்வியையும் தழுவியது. இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.