நாங்கள் வெற்றிக்கான வழிகளைக் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
இத்தொடரில் நாங்கள் பின்னடை சந்தித்த போதெல்லாம் யாரேனும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று முடிவடைந்தது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். அதன்பின், முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியிலும் மார்னஸ் லபுஷாக்னே 90 ரன்களைச் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததால், 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Trending
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் டாம் லேதம், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் அரைசதம் கடக்க, அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 372 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 80 ரன்களையும், அலெக்ஸ் கேரி 98 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்தத் தொடரில் ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் யாரேனும் ஒருநபர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக நினைத்துக் கொள்ளுங்கள், அதனால் நாங்கள் முழுமையான விளையாட்டை விளையாட வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த முக்கிய தருணங்களில் யாரேனும் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு தங்களை மேட்ச்வின்னராக மாற்றியுள்ளார். நாங்கள் வெற்றிக்கான வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம், இது மிகவும் அற்புதமான அணி.
அதேசமயம் இத்தொடரில் எங்கள் அணியின் சில வீரர்கள் இன்னும் சில ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளில் அவர்கள் எங்கள் அணிக்காக வெற்றிகளைத் தேடிக்கொடுத்துள்ளனர். சில நேரங்களில் நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வழியை கண்டுபிடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now