
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதையடுத்து இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் செயல்பட்டு வரும் சுனில் கவாஸ்கர் மைதானத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைகளில் ஏந்திய தருணத்தில் சிறு பிள்ளை போல நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.