
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தத் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆடுகளங்களின் தன்மை பற்றிய சர்ச்சை தொடங்கிவிட்டது. இந்தியா தங்களது பந்து வீச்சிக்கு சாதகமாக ரேங்க் டர்ணர்களை அமைப்பதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூர் மைதானத்தின் ஆடுகளத்தை ஐசிசி தரமற்றதாக மதிப்பீடு செய்து மூன்று டிமெரிட் புள்ளிகளை வழங்கியது.
இந்நிலையில் நான்காவது போட்டி நடைபெற இருக்கும் அகமதாபாத்தின் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று எதிர்பார்ப்பு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான் அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியாகும். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் அங்கு டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியின் ஆடுகளமும் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்ததாக இங்கிலாந்து அணியின் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.