
கொல்கத்த நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 80 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் கேகேஆர் அணிக்காக விளையாடிய சுனில் நரைன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படித்துள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் சுனில் நரைன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் தனித்துவ சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அந்தவகையில் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 உட்பட, சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இதுவரை 187 இன்னிங்ஸ்களில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் 182 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக சமித் படேல் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 200 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.