
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 16 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியாவுக்கு ரோஹித் சர்மா தலைமையில் அனுபவமும் இளமையும் கலந்த தரமான அணி களமிறங்கும் என்று நம்பப்படுகிறது.
ஏனெனில் தற்போது தொடங்கியுள்ள ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களும் தேர்வாகியுள்ளனர். பொதுவாக போட்டி நிறைந்த இந்திய அணியில் இந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு 5 முனை போட்டு ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
அதில் காயத்திலிருந்து குணமடைந்து வரப்போகும் ரிஷப் பந்த், 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய கேஎல் ராகுல் ஆகியோருக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், இஷான் கிசான் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு போட்டியில் உள்ளனர். இந்நிலையில் கழற்றி விடப்பட்டாலும் சமீபத்திய தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் சதமடித்து தரத்தை நிரூபித்துள்ள சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.