
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இதில் அறிவிக்கப்பட்டுள்ள டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேசமயம் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
அதேபோல் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவையும், துணைக்கேப்டனாக ஷுப்மன் கில்லை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்த அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்களான ரியான் பராக், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் இருந்து அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார்.