
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அதன்படி இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார். முன்னதாக கடந்த 2016அம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்துள்ளதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.