
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்று. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை சமன்செய்யும். இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இத்தொடரில் சூர்யகுமார் யாதவ் சதமடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 5 சதங்களை அடித்து சாதனையை தன்வசம் வைத்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் 4 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.