
இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறி அண்மையில் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அதோடு குடல் இறக்கம் பாதிப்பாலும் அவதிப்பட்டு வரும் அவர் விரைவில் ஜெர்மனி சென்று அதற்கான சிகிச்சையையும் எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
உலகின் நம்பர் 1 டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவ் இப்படி அடுத்தடுத்த பாதிப்புகளை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாக்கின.
அதோடு டி20 உலக கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியை எட்டி விடுவாரா? என்ற சந்தேகமும் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் லண்டன் சென்று கணுக்கால் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் தனது உடற்பகுதி குறித்த முக்கிய அப்டேட் ஒன்றினை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.