
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படுகிறது. இந்திய அணி தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி முடித்துக் கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முடிவடைகிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி அங்கிருந்து நேராக அயர்லாந்து நாட்டிற்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடக்கிறது.
அதன்பின் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரும், இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடக்க இருக்கிறது. எனவே இதில் விளையாடும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. இந்த காரணத்தால் அயர்லாந்து செல்லும் இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பது கடினம் என்று சொல்லப்படுகிறது. அவர் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீசில் முடித்துக் கொண்டு, தன் உடல் நிலையை எப்படி உணர்கிறாரோ அதை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும் என்று பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.