
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே நேற்றைய முதல் போட்டியில் விளையாடியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவிக்க பின்னர் அதனை வெற்றிகரமாக துரத்திய இந்திய அணியானது 48.1 ஓவர்களில் 281 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவின் ஆட்டம் அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு இன்னிங்ஸ்ஸாக மாறியது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தடுமாறி வரும் சூரியகுமார் யாதவிற்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவை வழங்கி வந்தது.
அதனால் அவரது இடம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் இருந்து வரும் வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆறாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளை சந்தித்து ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 50 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். இருப்பினும் போட்டியை முடித்துக்கொடுக்காமலே வெற்றி அருகில் இருந்த போது அவர் ஆட்டமிழந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது.