சிஎஸ்கேவின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்த கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சிஎஸ்கே அணியின் 11 வருட சாதனையையும் முறியடித்துள்ளது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 9ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் டைர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் (3) மற்றும் மந்தீப் சிங்(0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் டேவிட் வில்லி. கேப்டன் நிதிஷ் ராணா ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 ரன்களுக்கு வெளியேறினார். அதன்பின்னர் ஆண்ட்ரே ரசல் முதல் பந்திலேயே டக் அவுட்டாக, 89 ரன்களுக்கே கேகேஆர் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
Trending
அதன்பின், 6ஆவது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாகூர் அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக ஆர்சிபி பவுலிங்கை அடித்து விளையாடி 20 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடி 29 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவிக்க, அவருடன் இணைந்து அபாரமாக ஆடிய ரிங்கு சிங் 33 பந்தில் 46 ரன்கள் அடித்தார். 6வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூரும் ரிங்கு சிங்கும் இணைந்து 103 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது கேகேஆர் அணி.
இதையடுத்து, 205 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி - ஃபாஃப் டுப்ளெசிஸ் இணைந்து முதல் 4 ஓவரில் அடித்து ஆடி 42 ரன்களை குவித்தனர். 5வது ஓவரை வீசிய சுனில் நரைன், விராட் கோலியை 21 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுக்க, அடுத்த ஓவரிலேயே டுப்ளெசிஸை 23 ரன்களுக்கு வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி.
அதன்பின்னர் கிளென் மேக்ஸ்வெல்(5) மற்றும் ஹர்ஷல் படேல் (0) ஆகிய இருவரையும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். மைக்கேல் பிரேஸ்வெல்லை 15 ரன்களுக்கு ஷர்துல் தாகூரும். ஷபாஸ் அகமதுவை(1) சுனில் நரைனும் வீழ்த்த, தினேஷ் கார்த்திக் (9), அனுஜ் ராவத்(1) மற்றும் கரன் ஷர்மா ஆகிய மூவரையும் அறிமுக ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா வீழ்த்தினார். கடைசி விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்த பெங்களூரு அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோ இணைந்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
இந்த சாதனையைத் தான் வருண் சக்கரவர்த்தி (4 விக்கெட்டு), சுயாஷ் ஷர்மா (3 விக்கெட்டு), சுனில் நரைன் (2 விக்கெட்டு) ஆகியோர் சேர்ந்து மொத்தமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 9 விக்கெட்டுகள் (2023)
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2012)
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2019)
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 8 விக்கெட்டுகள் (2019)
Win Big, Make Your Cricket Tales Now