-mdl.jpg)
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். ஆனால் மறுபக்கம் கேஎல் ராகுல் 13 ரன்னில் விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களிலும் ஷுப்மன் கில் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்து 29 பாந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டியும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 145 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.