T20 WC 2024: நமீபியாவை 72 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நமீபியா அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நமீபியா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லிங்கென் - நிக்கோலஸ் டேவின் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவின் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஜான் ஃபிரைலிங் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மைக்கேல் வான் லின்கென் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து சீட்டுக்கட்டுப் போல் சரிந்தனர்.
Trending
அதன்படி அணியின் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒருபக்கம் களத்தில் நிற்க, மறுமுனையில் களமிறங்கிய ஜேஜே ஸ்மித், ஸேன் க்ரீன், டேவிட் வைஸ், ரூபென் டிரெம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இதனால் நமீபியா அணி 43 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த போதும், அணியின் கேப்டன் எராஸ்மஸ் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி அசத்தினார்.
தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய எராஸ்மஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற நமீபியா அணி 17 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆடாம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now