T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான இடத்தை ஏறத்தாழ 7 அணிகள் உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்று முக்கியமான லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது.
தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸை வென்ற நமீபியா அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோஸ் பட்லர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட்டும் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 13 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
அதன்பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் - ஹாரி புரூக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் பவுண்டரியும், சிக்ஸர்களுமாக விளாசித்தள்ளினர். அதன்பின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மொயீன் அலி தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 16 ரன்களையும், அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 2 சிக்ஸர்களுடன் 13 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தர்.
அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி புரூக் 4 பவுண்டரி, 2 சிஸ்கர்கள் என 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்தது. நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரெம்பல்மேன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து நமீபியா அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லிங்கேன் - நிக்கோலஸ் டேவின் இணை அதிரடியான தொடக்கத்தக் கொடுத்தனர்
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் டேவின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லோகன் வான் லிங்கேன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 33 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டேவிட் வைஸும் 2 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்கள் என 27 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நமீபியா அணியின் தோல்வியும் உறுதியானது.
அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாததால் 10 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்த்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இருப்பினும் ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலிய அணியின் வெற்றி தோல்விகளை வைத்தே இங்கிலாந்து அணியின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பானது உறுதிசெய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now