
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அதன்படி பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் விராட் கோலி அடித்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். இதனையடுத்து இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை கேசவ் மஹாராஜ் வீச அந்த ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பின் ஓவரின் நான்காவது பந்தில் ரோஹித் சர்மா ஸ்வீப் ஷாட்டின் மூலம் டீப் ஸ்கொயர் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்ய, அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஹென்ரிச் கிளாசென் அபாரமான டைவ் அடித்ததுடன் கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதனால் இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.