
பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலியின் அரைசதத்தின் மூலமும், அக்ஸர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் 4 ரன்களில் நடையைக் கட்ட அதன்பின் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக்கும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.