
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த நிலையில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் 5 ரன்களை எடுத்திருந்த மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரூ பால்பிர்னியும் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த லோர்கன் டக்கர் - ஹாரி டெக்டர் இணை அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். ஆனால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்திருந்த லோர்கன் டக்கர் ஆட்டமிழக்க, 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹாரி டெக்டரும் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கர்டிஸ் காம்பேர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 12 ரன்களுக்கும், ஜார்ஜ் டெக்ரேல் 3 ரன்களுக்கும், மார்க் அதிர் 3 ரன்களுக்கும், பேரி மெக்கர்த்தி ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அயர்லாந்து அணியானது 50 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த கரேத் டெலானி - ஜோஷுவா லிட்டில் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். அதன்பின் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷுவா லிட்டிலும் தனது விக்கெட்டை இழந்தார்.