
இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததார். அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லரும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் நிதீஷ் குமார் 27 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 15 ரன்களையும் சேர்த்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் யாரும் பெரிதாக சோபிக்காத நிலையில், அமெரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியிலும் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.