
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியானது தொடக்கத்திலிருந்தே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஏங்கெல்பிரெக்ட் 40 ரன்களையும், லோகன் வான் பீக் 23 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஓட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன், ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியும் 16 ரன்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச்சென்றனர். இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்த டேவிட் மில்லர் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.