
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும், பரபரப்பும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இம்முறை சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ஏனெனில் நடப்பு சீசனில் அந்த அணி விளையாடிய முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியுள்ளது.
இதன் காரணமாக அந்த அணி எஞ்சியுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்வதுடன், அதிக ரன் ரேட் விகிதத்திலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சோபிக்காமல் தவறிவருவது ரசிகர்களையும் ஏமாற்றமடைய செய்துள்ளது.