இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது - ரோஹித் சர்மா!
எதிரணியைப் பற்றி சிந்திக்காமல் சுதந்திரமாக விளையாடுவோம். அதனால் நங்கள் தற்போது செய்துவருவதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 92 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Trending
இந்நிலையில் இப்போட்டி முடிந்து அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இந்த வெற்றியானது திருப்தி அளிக்கிறது. எதிரணியின் எதிர்ப்பையும் அவர்கள் கொண்டு வரும் அச்சுறுத்தலையும் நாங்கள் அறிவோம். ஒரு குழுவாக நாங்கள் சிறப்பாகச் செய்தோம், நாங்கள் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்துகொண்டே இருந்தோம். இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் 200 ரன்கள் என்பது சிறந்த ஸ்கோர் தான். ஆனால் இதுபோன்ற மைதானங்களில் காற்று ஒரு பெரிய காரணியாக செயல்படுவதால் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாங்கள் மைதாத்தின் தன்மைக்கு ஏற்றபடி சிறப்பாக செயல்பட்டுள்ளோம். மேலும் அணியில் உள்ள அனைவரும் தங்களுடைய பணியைச் சிறப்பாக செய்து வருகின்றனர். அதிலும் பந்துவீச்சாளர்கள் தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.
குல்தீப் யாதவின் பலம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் அவரை தேவைப்படும் நேரத்தில் தான் பயன்படுத்த வேண்டும். நியூயார்க்கில் உள்ள மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருந்தது. அதனால் அங்கு குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு உதவும் என்பதால் இங்கு அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது எங்களுக்கு தெரியும்.
அரையிறுதியில் நாங்கள் வித்தியாசமாக எதையும் செய்ய விரும்பவில்லை, தற்போது செல்லும் வழியில் விளையாடி ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு விளையாட வேண்டும். எதிரணியைப் பற்றி சிந்திக்காமல் சுதந்திரமாக விளையாடுவோம். அதனால் நங்கள் தற்போது செய்துவருவதையே தொடர்ந்து செய்ய வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் விளையாடுவது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now