T20 WC 2024, Super 8: சால்ட், பேர்ஸ்டோவ் அதிரடியில் விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கின் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
Trending
பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பாவெல் இணையும் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். அதிலும் குறிப்பாக ரோவ்மன் பாவெல் 17 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர நிக்கோலஸ் பூரனும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 143 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் - ரொமாரியோ ஷெஃபெர்ட் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரூதர்ஃபோர்ட் 28 ரன்களையும், ரொமான்ரியோ ஷெஃபெர்ட் 5 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் 25 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியானது 84 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன்பின் பில் சால்டுடன் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் சால்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அத்துடன் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பில் சால்ட் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 48 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now