T20 WC 2024, Super 8: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தியது. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ரிஷப் பந்த் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வந்த ரிஷப் பந்த் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.
Trending
அவரைத்தொடர்ந்து நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறிய விராட் கோலி இப்போட்டியிலாவது ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, இந்திய அணியானது 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
ஒரு கட்டத்திற்கு மேலும் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 60 ரன்களைத் தாண்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்கும் முயற்சியில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியாவும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்ஸர் படேல் இரண்டு பவுண்டரிகளுடன் 12 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஹஸ்ரதுல்லா ஸஸாய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ், 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஹஸ்ரதுல்லா ஸஸாயும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த குல்பதீன் நைப் மற்றும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குல்பதீன் நைப் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய நஜிபுல்லா ஸத்ரான் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களுடன் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அனுபவ வீரர் முகமது நபியும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now