T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் மீதமிருக்கும் இரு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விஸ்வரூபமெடுத்த ரோஹித் சர்மா அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் விளாசியதுடன் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய ரிஷப் பந்த் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Trending
ஆனாலும் தனது அதிரடியான ஆட்டத்தை கைவிடாத ரோஹித் சர்மா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 92 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களிலும், ஷிவம் தூபே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் இப்போட்டியில் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அடிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸருடன் 9 ரன்களையும் சேர்த்து அணிகு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினாலும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டேவிட் வார்னர் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் அக்ஸர் படேலின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசிய இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் 20 ரன்களுக்க் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இந்திய அணியை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி 76 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட்டும் ஒரு ரன்னுடனும், அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்களையும், 20ஆவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 4 ரன்களையும் மட்டுமே கொடுத்து அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் மூன்றாவது அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியானது ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவை பொறுத்து தற்போதுவரை அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now