T20 WC 2024, Super 8: ஹர்திக் பாண்டியா அரைசதம்; வங்கதேச அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Trending
பின்னர் இணைந்த ரிஷப் பந்த் மற்றும் ஷிவம் தூபே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை தாரை வார்த்தார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஒரு பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் தொடர்ந்து தடுமாறி வந்த ஷிவம் தூபே 3 சிக்ஸர்களை அடித்திருந்தாலும் 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தன்ஸிம் ஹசன் ஷாகிப் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 197 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now