
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தியது. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ரிஷப் பந்த் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வந்த ரிஷப் பந்த் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.
அவரைத்தொடர்ந்து நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதளவில் சோபிக்க தவறிய விராட் கோலி இப்போட்டியிலாவது ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களை மீண்டும் ஏமாற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, இந்திய அணியானது 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.