
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது கயானாவில் இன்று நடைபெற்று வருகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றங்களு செய்யப்படவில்லை.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம்போல் ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்க, மறுபக்கம் விராட் கோலியும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலி நிச்சயம் பெரிய ஸ்கோரை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிக்ஸர் அடித்த அதே ஓவரில் மீண்டும் அடிக்க முயன்று க்ளீன் போல்டாகியதுடன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்தும் வெறும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன் காரணமாக இந்திய அணி 40 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.