ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 15 வருடங்களாக 2ஆவது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரி பாகிஸ்தானிடம் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியது.
அதன்பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்தில் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பை போன்ற ஆசிய கோப்பையில் தோற்றது. அதிலும் சூப்பர் 4 சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய இந்தியா அழுத்தமான முக்கிய போட்டிகளில் சொதப்புவதில் நாங்கள் கொஞ்சமும் முன்னேறவில்லை என்று மீண்டும் நிரூபித்தது.
அதைவிட கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பெற்றுள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் வேகத்துக்கு கை கொடுக்கக் கூடிய ஆஸ்திரேலியாவில் 130+ கி.மீ வேகத்தில் வீசும் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர்.