டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஸ்காட்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தோடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதன் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 'சூப்பர் 12' சுற்றில் 8 நாடுகள் நேரடியாக விளையாடும். முதல் சுற்றின் மூலம் 4 அணிகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.
முதல் சுற்றின் 3ஆவது 'லீக்' ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் 'பி' பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது.
Trending
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஸ்காட்லாந்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 5 ஓவரிலேயே அந்த அணி 50 ரன்னை தொட்டது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்ஸி அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் 20 ரன்களில் வெளியேறினார்.
கேப்டன் ரிச்சி 16 ரன்கள், கேலம் மெக்லியாட் 23 ரன்கள் சேர்க்க, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. ஜார்ஜ் முன்ஸி 66 ரன்களுடனும், கிறிஸ் கிரீவ்ஸ் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - எவின் லூயீஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மேயர்ஸ் 20 ரன்களிலும், எவின் லூயிஸ் 14 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய பிராண்டன் கிங் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், ஷமாரா ப்ரூக்ஸ், ரோவ்மன் பாவெல், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப் என டி20 நட்சத்திரங்கள் ஸ்காட்லாந்து பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனால் கடைசி வரை போராடிய ஜேசன் ஹோல்டரும் 38 ரன்களோடு ஆட்டமிழக்க, 18.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஸ்காட்லாந்து தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டுகளையும், பிராட் வீல், மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now