
ஐசிசி அடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாட் காம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.