
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் இடையே அடிலெய்டில் நடந்த போட்டியில் இந்திய அணி ஜெயித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி 64 ரன்கள் மற்றும் கேஎல் ராகுலின் 50 ரன்கள் என அதிரடி அரைசதங்கள் மூலம் 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது இந்திய அணி.
185 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது அதிரடி அரைசதத்தால் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை வங்கதேச அணி குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை காரணமாக 15 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
இதனால் 16 ஓவரில் 151 ரன்கள் வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மழை முடிந்து களத்திற்கு வந்த லிட்டன் தாஸை ராகுல் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். 27 பந்தில் 60 ரன்களை குவித்து இந்திய அணியை மிரட்டிவந்த லிட்டன் தாஸை டேரக்ட் த்ரோவின் மூலம் ராகுல் ரன் அவுட்டாக்க, அதன்பின்னர் வங்கதேச பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிய, 16 ஓவரில் 145 ரன்கள் அடித்து 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்றது.