T20 WC 2024: பெர்ரிங்டன், லீஸ்க் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நமீபியா அணிக்கு கோட்ஸி - நிகோ டேவின் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கோட்ஸி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜான் ஃபிரைலிங்கும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகோ டேவினும், இரண்டு ரன்கள் எடுத்திருந்த நிலையில் மலான் க்ரூகரும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் - ஸான் கிரீன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய எராஸ்மஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் எராஸ்மஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
Trending
இதைத்தொடர்ந்து ஸான் க்ரீன் 28 ரன்களிலும், டேவிட் வைஸ் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே சேர்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பிராட் வீல் 3 விக்கெட்டுகளையும், பிராட்லீ க்யூரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து ஆணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் முன்ஸி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சிறப்பாக தொடங்கிய மைக்கேன் ஜோன்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்களுக்கும், பிராண்டன் மெக்முல்லன் 19 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ கிராஸும் 3 ரன்களோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் - மைக்கேல் லீஸ்க் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த மைக்கேல் லீக்ஸ் 4 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணியானது 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணியானது குரூப் பி பிரிவு புள்ளிப்பட்டியளிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now