
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலி, அக்ஸர் படேல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், டி காக், ஸ்டப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் இந்திய அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.