
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோகித், சூர்யகுமார் ஆகியோரிடன் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாகவே ஹாரி புரூக் 25 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “வெளிப்படையாக கூற வேண்டும் எனில், அவர்களுக்கு சில அருமையான ஸ்பின்னர்கள் கிடைத்துள்ளனர். எங்கள் அணியிடமும் இருவர் நன்றாகப் பந்துவீசினர், ஆனால் ஆட்டத்தை திருப்பி பார்த்தால், இந்த இன்னிங்ஸில் நான் மொயீனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த சூழ்நிலைகளில் மழை பெய்ததால், அது இவ்வளவு மாறும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா உண்மையிலேயே இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டனர்.