
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷமிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே குயின்டன் டி காக்கின் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸா ஹென்றிக்ஸ் (29) - கேப்டன் ஐடன் மார்க்ரம் (23) ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 8.5 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் மார்கோ ஜான்சென் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், “நிச்சயம் ஒரு அணியாக இது ஒரு சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் சிறப்பாக விளையாட சூழல் எங்களை அனுமதிக்கவில்லை. இது தான் டி20 கிரிக்கெட். அதனால் நீங்கள் அமைத்து விதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். மேலும் இன்றைய போட்டியில் தென் அப்பிரிக்கா அணி சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அனாலும் இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சின் மூலம் நாங்கள் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்துள்ளோம்.