இந்த மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பது தெரியவில்லை - ரோஹித் சர்மா!
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங் செய்த போதும் மைதானத்தில் பேட்டர்களுக்கு சாதகம் இல்லை. ஆனால் பந்துவீச்சாளர்களுக்க்கு நிறைய உதவி கிடைத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டக்ரேல் உள்ளிட்ட வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Trending
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரேத் டெலானி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணியானது 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் நட்சத்திர் வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் இணைந்த ரோஹித் சர்மா - ரிஷப் பந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ரோஹித் சர்மா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 52 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா காயம் காரணமாக பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினிம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய ரோஹித் சர்மா, “எனது தோல் பட்டையில் சிறிது வலியை உணர்ந்தேன் மற்றபடி வேறுதும் இல்லை. இப்போட்டியின் டாஸின் போதே இந்த மைதானத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரியவில்லை என்று கூறினேன். வெறும் 5 மாதங்களே ஆன இந்த மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பது தெரியவில்லை. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங் செய்த போதும் மைதானத்தில் பேட்டர்களுக்கு சாதகம் இல்லை. ஆனால் பந்துவீச்சாளர்களுக்க்கு நிறைய உதவி கிடைத்தது.
அர்ஷ்தீப் தவிர்த்து எங்களுடைய அனைத்து வீரர்களும் நிறைய டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். ஆரம்பத்திலேயே அவர் எடுத்த 2 விக்கெட்டுகள் தான் எங்களுக்கு இப்போட்டியில் வெற்றிக்கான வழியை கொடுத்தது. அடுத்த போட்டியில் 4 ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவோம் என்று நான் நினைக்கவில்லை. எங்களுடைய அணியில் சமநிலை இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். சுழல் பின்னர் தன்னுடைய வேலையை செய்யும். இன்று நான்கு வேகப்பந்து வீச்சளர்களுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது, இன்னும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை ஆல்ரவுண்டர்களாகப் பெற முடிந்தது.
ஆனால் உண்மையை கூற வேண்டும் எனில் இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்த்தம் வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இதே போன்ற சூழ்நிலை இருந்தால் அதற்கு தகுந்தார் போல் நாங்கள் எங்களை தயார்செய்துகொள்வோம். அப்போட்டியில் அணியில் உள்ள 11 வீரர்களும் வெற்றிக்காக தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டிய போட்டியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now