
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் இருவரும் தலா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஹரி டெக்டரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய லோர்கன் டக்கர் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கர்டிஸ் காம்பேர் 10 ரன்களிலும், ஜார்ஜ் டக்ரேல் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோர்கன் டக்கரும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.