
வங்கதேச அணியின் அதிரடி தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் (Tamim Iqbal) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டிற்குப் பிறகு அடுத்த நாளே தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
ஆனால் அதன்பின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோரது மோதம் மற்றும் தேர்வுகுழுவில் ஏற்பட்ட சலசலப்புகள் காரணமாக வங்கதேச அணியில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். இதனால் கிட்டத்திட்ட ஓராண்டுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த தமிம் இக்பால் உள்ளூர் மற்றும் ஃபிரான்சைஸ் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் இடம்பிடிப்பாரா என்ற கேள்விகள் எழுத்தொடங்கியது.
மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வந்ததன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் தமிம் இக்பால் இடம்பிடிப்பார் என வங்கதேச கிரிக்கெட் வாரிய வட்டாரங்களும் தெரிவித்திருந்தன. இந்நிலையில் தான் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து தேர்வாளர்களுக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார்.