
மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணியின் செயல்திறன் ஏற்ற இறங்கங்களை கொண்டுள்ளது.
ஏனெனில் ஜூன் மாதம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தவகையில் 26 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 22 வெற்றிகளை குவித்த நிலியில், ஒருநாள் தொடரில் இலங்கை அணியிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8இல் வெற்றி, 6இல் தோல்வி, 1 போட்டி டிரா என ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய அணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவதன் மூலம், அடுத்த ஆண்டு அட்டவணையை தொடங்குகிறது. அதன்படி வரும் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி, அடுத்ததாக பிப்ரவரி மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.