
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் பேட்டிங்கை தொடங்கினர். ஆரம்பம் முதலே சொதப்பி வந்த டேவிட் வார்னர் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஷமி ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார். இவர் 4 பவுண்டரிகள் அடித்து 25 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் வந்தார். ஆனால், அவர் வந்த வேகத்தில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். ஒருபுறம் நிதானமாக ஆடிய கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.