ஐசிசி கோப்பையை வெல்லும் முயற்சியில் நாங்கள் எந்தவிதமான நெருக்கடியையும் உணரவில்லை - ராகுல் டிராவிட்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றால் இனிமையாக இருக்கும். இதற்காகத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்திருக்கிறோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Trending
ஏனெனில் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எந்தவொரு ஐசிசி தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியாமல் திணறி வருகிறது. அதிலும் குறிப்பாக ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை என முக்கிய தொடர்களில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
அதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது. இதனால் இம்முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணி நீண்ட காலமாக ஐசிசி கோப்பையை வெல்லாததால் (2013ஆம் ஆண்டுக்கு பிறகு) நெருக்கடியாக இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அப்படி எல்லாம் இல்லை.
ஐசிசி கோப்பையை வெல்லும் முயற்சியில் நாங்கள் எந்தவிதமான நெருக்கடியையும் உணரவில்லை. ஆனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றால் இனிமையாக இருக்கும். இதற்காகத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now