
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-1 என சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன்செய்து அசத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க தொடர் மற்ற இந்திய வீரர்களை விட கேஎல் ராகுலுக்கு மிகவும் ஸ்பெஷலானதாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை கைப்பற்றினார். இதன் மூலம் விராட் கோலிக்கு பிறகு இந்த சாதனை நிகழ்த்திய இந்திய கேப்டன் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
இதேபோன்று 2021 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கேஎல் ராகுல், இம்முறையும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் போட்டி முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் நாங்கள் முதல்முறையாக கேப் டவுனில் டெஸ்ட் போட்டியை வென்று இருக்கிறோம். தென் ஆப்பிரிக்க மண்ணில் இது என்னுடைய மூன்றாவது டெஸ்ட் தொடர். நாங்கள் எப்போதெல்லாம் இங்கு வருகிறோமோ, அப்போதெல்லாம் போட்டியிலே நாங்கள் எப்போதுமே இருக்கிறோம்.