
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலியின் ஓய்வு முடிவை ஏற்க மறுத்ததுடன் அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை விராட் கோலியும் இங்கிலாந்து தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கோலி தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.