ஸ்காட்லாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று எடின்பர்க்கில் நடைபேற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்ஸி 28 ரன்களையும், மேத்யூ கிராஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 80 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 39 ரன்களையும் சேர்த்தனர்.
மேலும் இப்போட்டியில் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சதனைகளையும் படைத்து அசத்தியுள்ளது. அந்தவகையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான இந்த முதல் டி20 போட்டியில்155 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா 62 பந்துகள் மீதமுள்ள நிலையில் எட்டியது.